படம் ஒன்றினை இணைப்பது எப்படி - சோதனை செய்கிறேன்
சோதனை வெற்றி
நட்புடன் சீனா
படித்ததில் மனதில் தைத்தது - கண்டதில் மனதில் பட்டது
”தூரிகைச் சிதறல்....”: வாழ்த்துரை:
வேழ முகம் தாங்கி வீற்றிருப்போனே..!
வேலன் துணைத் தாங்கி வாழ்வளித்தோனே..!
வால்மீகி வரலாறு படைக்க வண்ணமாய்
வந்தமர்ந்து எண்ணமாய் உதித்தோனே.
முன்னைவினை யாவும் வென்று முடித்தோனே..!
அன்னைத் தமிழுக்கு அழகு செய்தோனே..!
காலனை வென்ற வேலன் நின்ற
திசைப் பார்த்து வணங்கிப் பணிகிறேன்.
சத்தியும் சிவனுமாய் சத்தியம் பேசுகிறேன்
சங்கத் தமிழ் மூன்றும் சந்தமாய் வீசுகிறேன்
சொந்தத் தமிழினிலே பாசுரங்கள் பாடுகிறேன்
வங்கக் கடலினிலே வாரணன் போற்றுகிறேன்.
வளரும் பிறையாக வளரட்டும் தமிழ்
மலரும் மலராக மலரட்டும் அகம்
சூரியச் சுடரொளி மதியென வீசட்டும்
சுத்தத் தமிழால் பாரெங்கும் பேசட்டும்
மடைத் திறந்த வெள்ளமாய் இன்று
மனம் திறக்கும் மயில் ஒன்று
வண்ணங்கள் காட்டி தன் எண்ணங்கள்
எழுதவரும் வேலை இது,- வாழ்த்துரைத்து
வரவேற்கிறேன் வடிவேலன் அருள் பெருக
வந்தமர்ந்த கணபதி தாள் பணிந்து
வருக..! வருக...!! வளர்க நாளும் தமிழில்
வாழ்த்துகிறேன் வளம் பெறுக.
என்றும் அன்புடன்,-தமிழ்க்காதலன்.
Posted by cheena (சீனா) at 5:05 PM 2 comments
எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்திற்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு , அது பிரசுரமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால் அது நடக்காவிட்டால் , அந்தப் படைப்புகள் குப்பைக்கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்க வில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள். பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள். விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றை எல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவி இருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயனிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகி விட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் தெரியாதவர்களை படிப்பறிவில்லாதவர்கள் எனச் சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லா விட்டால் முகவரி இல்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்த வரை, வலைப்பூக்கள் தான் கருத்துகளைச் சொல்லும் படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுனர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களயும் வலைப்பூக்கள் நம்க்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைகுள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான் விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம். நாடு, இனம் மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போலவே பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிச்லகாரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல்விளக்கு, க.பாலாசி, நசரேயன் , நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள் நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக் கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேறகத் தகுந்த ஒன்று. வலைப்பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகள் வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள். அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட தொலைக்ட்சி விமர்சனங்கள், என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல் சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃப்ஹீமாஜஹான், நளாயினி, புதிய மாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி ப்ரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான், அபூர்வமான் படைப்புகளை பதிவிடுகின்றனர். தமிழ் இலக்கியங்களையும் மரபு வழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல் படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன். சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்த்க வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
இன்னும் சிலர் தொழில் நுட்பம் தொடர்பான் தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷணன், மாலன், ஞானி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாகக் கூறுவதென்றால் வலைப்பூக்கள் ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீன பரிமானங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெறச் செய்ததில் வலைப்பதிவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ள முடிகிறது.
இன்னும் சில காலம் போனால் மரபு வழி ஊடகங்களுக்கு இணையாக , வலைப்பூக்கள் மாதிரியான இணைய வழி ஊடகங்களுக்கும் செல்வாக்கு கிடைத்துவிடும். இதை மரபு வ்ழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும் ஊடகங்களின் பரிமானம் மாறிக்கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக் கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயார்கிக் கொண்டிருக்கின்றன.
புத்தாண்டின் முதல் நாள் அன்று வெளியான தினமணி பத்திரிகையில் வெளிவந்த - எம்.மணிகண்டன் எழுதிய கட்டுரை.
அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Posted by cheena (சீனா) at 9:41 AM 65 comments
Labels: தினமணி, படைப்பாளிகள், பதிவர்கள்
அருமை அன்பர் அராதா அன்புடன் குழுமத்தினில் பகிர்ந்த ஒரு இழையினை இங்கு இடுகையாகப் போடுவதில் மனம் மகிழ்கிறேன்
Posted by cheena (சீனா) at 8:01 PM 21 comments
Labels: அராதா அன்புடன்
எனதருமை நண்பர் தமிழன் வேணு எழுதிய கொன்றை வேந்தன் 2008
------------------------------------------------------------------
கொன்றைவேந்தன்-2008
------------------------------------
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு
ஆலய வாசலில் தாவணி பாரு
இங்கிலீஷிலே எப்பவும் பேசு
ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு
உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி
ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி
எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு
ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை
ஐ லவ் யூவென சொல்லிப் பழகு
ஒவ்வொருநாளும் சட்டை மாற்று!
ஓஹோவென்று ஃபிகரைப் புகழ்
ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள்
அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை
கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
காசில்லார்க்குக் காதலி இல்லை
கிண்டல் செய்வது மாணவர்க்கழகு
கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு
குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு
கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு
கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை
கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு
கைபேசி மாடலை அடிக்கடி மாற்று
கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசு
கோபம் வந்தால் வீட்டிலே காட்டு
கௌபாய் போல ஊரை சுற்று
சத்யம் தியேட்டர் சாலவும் நன்று
சாகிறவரைக்கும் மொக்கை போடு
சிகரெட் பிடித்தால் மறைந்து ஊது
சீறும் பல்சரை தினசரி ஓட்டு
சும்மாயிருந்தால் கவிதை எழுது
சூடும் சொரணையும் காதலர்க்கில்லை
செல்போன் ரிங்டோன் அடிக்கடி மாற்று
சேரும் நண்பர்கள் ஜேப்பைக் கவனி
சைட்டடிப்பதற்கு கூலிங்-கிளாஸ் போடு
சொட்டைத்தலையில் தொப்பியை அணி
சோதாநண்பர்கள் உடன்வரும் சனி
தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை
தாய் ரிமோட் எடுத்தால் நெடுந்தொடர் தொல்லை
திரைப்படப்பாட்டைத் தினசரி ஓது
தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
துட்டுள்ளவரை தான் உடன்வரும் நட்பு
தூக்கம் வரும்வரை எஃப்.எம்.கேளு
தெளிவுடையோரைத் தூர விலக்கு
தேடிப்போனால் பாட்டியும் முறைப்பாள்
தைத்ததை விடவும் ரெடிமேட் நன்று
தொலைந்த செல்போன் திரும்ப வராது
தோழனுடன்போய் ஜொள்ளுதல் தீது
நமீதா நாமம் நயம்பட உரை
நான்கில் ஒரு ஃபிகர் நிச்சயம் தேறும்
நித்தம் செல்லை டாப்-அப் பண்ணு
நீள எஸ்.எம்.எஸ். அனுப்புதல் தவிர்
நுரைவரும் பீரை வெயிலில் பருகு
நூல்விடாமல் ஃபிகர் கிடைக்காது
நெட்டை ஃபிகரும் ஒட்டடைக்கு உதவும்
நேரம் கிடைத்தால் பாடமும் படி
நையப்புடைப்பது அப்பா கடமை
நொண்டிச்சாக்கு தினசரி புகல்
நோட்டில்லேன்னா கேட்டுக்கு வெளியே!
படங்கள் தனியாய்ப் பார்ப்பது பாவம்
பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து
பில்லியன் சீட்டிற்கு ஃபிகரே பெருமை
பீஸைத் தின்றால் ஹால்-டிக்கெட் இல்லை
புத்தகம் இருப்பது ஃபோட்டோ வைக்க
பூசை என்பது தண்ணியடித்தல்
பெண்கள் காலேஜ் புண்ணியதீர்த்தம்
பேசிக்கொல்வது பெண்டிர் இயல்பு
பையனைப் போலே பல்லைக்காட்டாதே
பொதுவிடம் என்றால் முதுகில் கவனம் வை
போன செமஸ்டர் திரும்ப வராது
மன்மதக்குஞ்சு நீயென்றுணர்
மாமிகள் நட்பு ஆபத்துக்குதவும்
மிஞ்சும் பெண்ணிடம் கெஞ்சுதல் நன்று
மீட்டர் இல்லா ஆட்டோ காதல்
முற்பகல் காட்சியை முதல்நாள் பாரு
மூன்றாண்டில் டிகிரி முடிப்பவன் மேதை
மென்ட்டல் என்பவன் தினசரி படிப்பவன்
மேட்னி போகக் கூட்டணி சேரு
மையிடும் பெண்கள் பழையபஞ்சங்கம்
மொறைக்கிற பெண்ணைத் துரத்துதல் தவிர்
மோட்சம் அளிப்பது ஃபிகரின் புன்னகை
வண்டியிருப்பது ஊர் சுற்ற உதவும்
வாட்டமளிப்பது கோடை விடுமுறை
விடாமல் தொடரும் வித்தையில் தேறு!
வீட்டுக்குப் போனால் விழுந்திடும் உதை
உடான்ஸ் விடுகையில் கவனம் தேவை
ஊக்கம் தருவது ஓரக்கண் பார்வை
வெட்டிப்பொழுதில் வெளியே திரி
வேஸ்ட் எனப்படுவது ஃபிகர்களில் இல்லை
வைதிடும் பெண்ணைக் கைதொழுதிடு
ஒரு ஃபிகர் இருக்க மறு ஃபிகர் தவிர்
ஓட்டைவாய்நண்பனை ஒதுக்கிடல் நன்று
---------------------------------------------------
Posted by cheena (சீனா) at 4:54 PM 45 comments
Labels: கொன்றைவேந்தன், தமிழன்வேணு, நகைச்சுவை
நுகர்ந்தால் இன்பம் நுகர்ந்தால்
வருவது மகிழ்வு !
பயின்றால் மறை பயின்றால்
வருவது பண்பு !
கனிந்தால் மனம் கனிந்தால்
வருவது அன்பு !
கொடுத்தால் பொருள் கொடுத்தால்
வருவது உறவு !
பொறுத்தால் பிழை பொறுத்தால்
வருவது நட்பு !
உணர்ந்தால் துன்பம் உணர்ந்தால்
வருவது தெளிவு !
வேர்த்தால் உடல் வேர்த்தால்
வருவது பொலிவு !
கோர்த்தால் கை கோர்த்தால்
வருவது உயர்வு !
அகழ்ந்தால் நிலம் அகழ்ந்தால்
வருவது ஊற்று !
திறந்தால் வாசல் திறந்தால்
வருவது காற்று !
அறிந்தால் உனை அறிந்தால்
வருவது ஞானம் !
உதவினால் பகட்டின்றி உதவினால்
வருவது தெய்வம் !
--------------------------------------------
அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்தாக எனதருமை நண்பர் ராஜூ எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்
-------------------------------------------
நலம் சேர வாழ்த்துவது
நட்புடன் ..... சீனா
----------------------
Posted by cheena (சீனா) at 8:45 AM 1 comments
தஞ்சாவூர்க் கவிராயர் என்றொரு தனிச்சுற்றுக்கான காலாண்டிதழில் வெளி வந்த இரு கவிதைகள்.
பிள்ளையார் சுழி :
-------------------------
ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை
ஒரு ஆண்பிள்ளையாய்
நடத்தக்கூடாதா ?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என்பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ !
எச்சம் :
----------
சிலைகள் தோறும்
காக்கையின் எச்சம்.
வள்ளுவர் சொன்னது
சரி.
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தாற்
காணப்படும் !
நன்றி : தினமணி - தமிழ் மணி - 12.10.2008
Posted by cheena (சீனா) at 12:30 AM 7 comments
Labels: கவிதை, தஞ்சாவூர்க்கவிராயர், தினமணி