Friday, January 1, 2010

வலையுலகப் படைப்பாளிகள்

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்திற்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு , அது பிரசுரமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால் அது நடக்காவிட்டால் , அந்தப் படைப்புகள் குப்பைக்கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்க வில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள். பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள். விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றை எல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவி இருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயனிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகி விட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் தெரியாதவர்களை படிப்பறிவில்லாதவர்கள் எனச் சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லா விட்டால் முகவரி இல்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்த வரை, வலைப்பூக்கள் தான் கருத்துகளைச் சொல்லும் படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுனர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களயும் வலைப்பூக்கள் நம்க்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைகுள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான் விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம். நாடு, இனம் மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போலவே பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிச்லகாரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல்விளக்கு, க.பாலாசி, நசரேயன் , நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள் நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக் கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேறகத் தகுந்த ஒன்று. வலைப்பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகள் வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள். அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட தொலைக்ட்சி விமர்சனங்கள், என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல் சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃப்ஹீமாஜஹான், நளாயினி, புதிய மாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி ப்ரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான், அபூர்வமான் படைப்புகளை பதிவிடுகின்றனர். தமிழ் இலக்கியங்களையும் மரபு வழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல் படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன். சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்த்க வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர் தொழில் நுட்பம் தொடர்பான் தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷணன், மாலன், ஞானி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதென்றால் வலைப்பூக்கள் ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீன பரிமானங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெறச் செய்ததில் வலைப்பதிவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் சில காலம் போனால் மரபு வழி ஊடகங்களுக்கு இணையாக , வலைப்பூக்கள் மாதிரியான இணைய வழி ஊடகங்களுக்கும் செல்வாக்கு கிடைத்துவிடும். இதை மரபு வ்ழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும் ஊடகங்களின் பரிமானம் மாறிக்கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக் கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயார்கிக் கொண்டிருக்கின்றன.


புத்தாண்டின் முதல் நாள் அன்று வெளியான தினமணி பத்திரிகையில் வெளிவந்த - எம்.மணிகண்டன் எழுதிய கட்டுரை.

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா