Friday, October 26, 2007

கவியரசின் கண்ணன் பாட்டு



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென் கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திரு வேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

Sunday, October 21, 2007

புகாரியின் எழுத்துகள்

கவிதைக்குள் சொல்லைப் பார்ப்பவன் மனிதன்

சொல்லுக்குள் கவிதை பார்ப்பவன் கவிஞன்


நீ விளைத்த பழங்கள் நீ உண்ணமாட்டாய்

நீ உண்ணும் பழங்கள் நீ விளைவித்திருக்க மாட்டாய்

---------------------------------------------------------------------------------


புகாரி தன் சொந்த ஊரான தஞ்சை மாநகரம் பற்றி :

வானூறி மழை பொழியும்

வயலூறிக் கதிர் விளையும்

தேனூறி பூவசையும்

தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி

கவிபாடிக் கரையேறும்

பாலூறி நிலம் கூடப்

பசியாறும் தஞ்சாவூர்.
---------------------------------------------------------------------------------



Monday, October 15, 2007

தூரன் குணாவின் கவிதை - கணையாழி 2003



பூத்திருந்த காலம்



அன்றைய அந்திப்பொழுது


வீடு திரும்புதல்களில்


படிந்திருக்கும் அழுக்கு


புறத்தில் மட்டும்






விளையாட்டில் விட்டுக்கொண்ட


காய் எப்படியும்


பழுத்துவிடும் மறுநாள்






தூக்கிச் சொருகிய சேலையோடு


குளத்தில் வெளுத்த சலவைக்காரியின்


வெண் தொடைகளை விகல்பமின்றி பார்த்தது


சிறுநீரில் உயிரணுக்கள் கலவாத காலத்தில்






உள்ளம் போகும் தடத்தில்


உதைபந்தென இருந்த நாவு


இன்று சொற்களை தேர்கிறது


திறமையானதொரு சதுரங்க


ஆட்டக்காரனின் காய் நகர்த்தலாய்






பகிர்தலையும் புன்னகையையும்


புதைத்த இடத்தில்


மீந்த எலும்புத்துண்டுகளாய்


அவரவர் பால்யம்






(நன்றி: கணையாழி, 2003)
தூரன் குணா

Friday, October 12, 2007

கவிஞர் புகாரி





இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

வெளிச்ச அழைப்புகள் என்ற பதிவின் ஆரம்ப வரிகள் இவை.

கவிஞர் புகாரியின் கைவண்ணம்.

நான் ரசித்த வரிகள்
-----------------------------------------------------------------------

சுனாமி பற்றிய கவிஞரின் கவிதையில் :

படுத்துக்கிடக்கும்போதேபயமாய் இருக்கும் கடல்,
எழுந்து நின்றால் என்னாவது !!

கடலை இவ்வளவு அருமையாக வர்ணித்தது யாருமில்லை.
--------------------------------------------------------------------------

எழுத்தாளர் முத்துலிங்கம் - கவிஞர் புகாரியைச் சிறப்பிக்கும் ஒரு இலக்கிய விழாவில் - கவிஞரைப் பற்றிப் பேசியது :

"நான் கருவான முதல் இரவு என் முதலிரவு இல்லையாம்",

"சுவர்களல்ல, அறைகளல்ல வசிப்போரின் கூட்டுயிரே வீடு",

"வருவோரும் போவோரும், கண்ணே இருப்போரின் தொடர்தானே"



போன்று கவிஞர் புகாரியின் கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்குக் குறைவில்லை. தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை.

ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள்.

'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே விரலெறிந்த நகச் சிமிழோ'

இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன. இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.

பச்சைமிளகாய் இளவரசி என்ற கவிதையில்,


"மாலை கவிழ்ந்தால் தளிர் மடியில் என் மனதின் கிழிசல் தைக்கின்றேன்"
என்கிறார்.

மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது

'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார்.

இத்தனையும் கவிஞர் புகாரியின் கவிதைகள்
---------------------------------------------------------

Wednesday, October 10, 2007

கவியரசின் அனுபவக் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்'
எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
-------------------------------------------------------------------------------
என்ன ஒரு அருமையான கவிதை - அனுபவம் என்பது எல்லோருக்கும் அமையாது. ஒன்றினை உணர வேண்டுமானால் அதுவாக மாற வேண்டும். அப்போதுதான் அதன் அருமை புரியும். கேள்வி ஞானம் மட்டும் போதாது. கவியரசின் தத்துவக் கவிதைகளில் - படித்ததில் பிடித்த கவிதை

அறிமுகம்





வலையுலக நண்பர்களே !

தினந்தோறும் பல புத்தகங்கள், செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் எனப் பலவற்றைப் படிக்கிறோம். அவற்றில் சில வரிகள் - சில சொற்கள் - சில தொடர்கள் மனதில் சட்டெனப் பதிகின்றன. அவற்றை எல்லாம் இங்கு எழுதி வைக்கலாம் என ஒரு எண்ணம். தொடங்குகிறேன்.